சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 819 தேசிய, சர்வதேச மற்றும் ஆசிய அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி ஊக்கத் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது அரசியல் பயணங்கள் மற்றும் மக்களுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை பற்றி சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.

“வாரத்திற்கு நான்கு, ஐந்து நாட்கள் மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறேன். சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட மக்களுடன் சந்திப்புகளுக்காக பயணம் செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு செல்வதன் போது பலரும் மனுக்களை அளிப்பதாகவும், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மனுக்கள் அதிகரித்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மக்களுக்கு எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி அவர் பேசியார். “இந்தத் திட்டத்தின் மூலம் சிலர் கல்வி செலவுக்காகவும், சிலர் உடல்நலத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள். சில இடங்களில் தொகை வரவில்லை என்ற புகார்களையும் நாம் கவனமாக எடுத்துக்கொள்கிறோம்” என்றார். இதன் மூலம் மக்களோடு நேரடியாக இணைந்து செயல்படுவதே தமது கடமையென அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, மத்திய அரசை அவர் விமர்சித்தார். “தமிழ்நாடு மக்கள் ரூ.55 லட்சம் கோடி ஜிஎஸ்டி கட்டியிருக்கிறார்கள். ஆனால் கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அது சமஸ்கிருதம் மற்றும் குலக் கல்வி திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிதான்” என அவர் கடும் விமர்சனம் செய்தார்.