உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சில நாட்களுக்கு முன் சுவர்களில் ‘ஐ லவ் முகமது’ என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறிய நிலையில், அந்த பகுதியில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, கான்பூரைச் சேர்ந்த ஒன்பது பேரும், அடையாளம் தெரியாத பலர்மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போராட்டத்தின் போது சிலர் கற்களை வீசி போலீசாரை தாக்கினர். இதனால் நிலைமை கட்டுக்குள் வராமல் போனதால், போலீசார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பரேலியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை குலைக்கும் எந்த நபருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
போஸ்டர் ஒட்டிய சம்பவம் ஏற்கனவே சமூக ஒற்றுமைக்கு சவாலாக மாறிய நிலையில், ஏற்பட்ட மோதல்கள் மாநில அரசுக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்கள் அமைதியை பேண வேண்டிய அவசியம் குறித்து போலீசார் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
: