கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித் தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார். கிரெவென்டிக் 24எச் ரேஸில் கலந்து கொள்ளும் இவர், போட்டிக்கு முன்பாக தனது மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதனிடையே, அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் குமார் இணையும் படம் ‘ஏகே 64’ உருவாகவுள்ளது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். அண்மையில் தயாரிப்பாளர் ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புகைப்படத்தில், அவருடன் அஜித் மற்றும் ஆதிக் இணைந்திருப்பது, இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது பிறந்தநாளில் வெளியிட்ட பதிவில் ‘ஏகே’ என்ற வார்த்தையை ஹைலைட் செய்திருந்தார். இதனையடுத்து தற்போது வெளிவந்த புகைப்படம், ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் காம்போவில் ‘குட் பேட் அக்லி’ பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இந்த படம் ரசிகர்களுக்கு மரண மாஸ் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ‘மார்கோ’ படத்தின் இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது ‘ஏகே 64’ பற்றிய அப்டேட்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். கார் பந்தயத்தை முடித்தவுடன் அஜித் தனது அடுத்த படப்பிடிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.