கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தவெக சார்பில் இது எதேச்சையான விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என்று கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை தவெக நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் சந்தித்து, சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த மனு மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில் நாளை மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது. இதனிடையே, தவெக நிர்வாகிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு, காவல்துறை, தவெக ஆகியோருக்கிடையே குற்றச்சாட்டு – எதிர்க்குற்றச்சாட்டு நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதோடு, நீதிமன்ற விசாரணை மூலம் உண்மைகள் வெளிச்சம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.