இன்றைய ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் 7:30 மணிக்கு நடைபெறும்.
இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. கடந்த சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா பாகிஸ்தானை இரண்டு முறை எதிர்கொண்டு வெற்றியை பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல மல்டிபிளக்ஸ் நெட்வொர்க் பிவிஆர் ஐநாக்ஸ், ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒத்துழைத்து, இந்த இறுதி போட்டியை தன் திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பாக வழங்குகிறது. இதன் மூலம் ரசிகர்கள் வீட்டில் அமர்ந்து, கூடுதல் கள அனுபவத்துடன் போட்டியை ரசிக்க முடியும்.
முந்தைய 14ஆம் தேதி நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் சில திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, 80–90% ரசிகர்கள் முழுமையாக அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இன்றைய இறுதி போட்டிக்கும் பெரிய வரவேற்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.