புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மன் கீ பாத்’ ரேடியோ நிகழ்ச்சியின் 126வது அத்தியாயத்தில் உரையாற்றினார். விஜயதசமியை முன்னிட்டு, இந்த முறை நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில், அதே நாளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பித்துப் பேசும் அவர், “தியாகம், தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்கும் உணர்வே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உண்மையான பலம்” என்றார்.

அவர் மேலும், “நாட்டின் எங்காவது இயற்கை பேரிடர் ஏற்பட்டால், முதலில் செல்வோர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தான். அவர்களின் செயல்களில் எப்போதும் ‘தேசமே முதலில்’ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. நூற்றாண்டு பயணத்தில் அமைப்பு மக்கள் சேவையில் முன்னோடியாக உள்ளது” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் அமைப்பின் அர்ப்பணிப்பை புகழ்ந்து பேசினார்.
மேலும், சுதேசி பொருட்களை வாங்க மக்களை ஊக்குவித்தார். “இந்த பண்டிகை காலத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை முன்னுரிமையாக மக்கள் வாங்க வேண்டும். கைவினை கலைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இது நம்பிக்கையையும் வாழ்வாதாரத்தையும் தரும். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தியில், காதி நிறுவனப் பொருள்களை மக்களும் வாங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
நாட்டின் சாதனைகளையும் அவர் நினைவுகூர்ந்தார். யோகா பாய்கள் மற்றும் மூலிகை சாயம் கொண்ட ஆடைகளை உருவாக்கிய தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களை பாராட்டினார். மேலும், கடற்படை அதிகாரிகள் லெப்டினன்ட் கமாண்டர் தில்னா மற்றும் ரூபா பாயின்ட் நீமோவை கடந்து சென்ற சாதனையை வாழ்த்தினார். “இந்த சாதனைகள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன” என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.