கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்ந்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 41 உயிர்களை பலிகொண்ட இந்த துயர சம்பவத்துக்கான காரணம் குறித்து மாறி மாறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க எட்டு எம்பிக்கள் கொண்ட என்டிஏ குழு நேற்று கரூருக்கு வந்து நேரில் ஆய்வு செய்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் எம்பி தேஜஸ்வி சூர்யா, “பாதிக்கப்பட்டவர்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்காமல், 25 நிமிட தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஏன்? இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது” என்று கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குழுவினரை சந்திக்க மறுத்ததால், அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் உண்மை அறியும் குழு விளக்கமளித்துள்ளது. அதில், “இது தவறான குற்றச்சாட்டு. கூட்ட நெரிசலில் காயமடைந்த 11 பேர் அருகே இருந்த அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை வசதிகள் குறைவாக இருந்ததால் அரசு மருத்துவர்களும் அங்கு சென்றனர். 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, பாஜக அமைத்திருந்த குழு மத்திய அரசின் நாடாளுமன்ற குழுவல்ல, ஜே.பி. நட்டா அமைத்த உண்மை அறியும் குழு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தேர்தல் சூழ்நிலையில் மிகுந்த அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதோடு, மாவட்ட நிர்வாகம் மற்றும் பாஜக இடையே நேரடி மோதலையும் உருவாக்கியுள்ளது.