சென்னை: இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் முக்கிய இடம் பிடித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான ஹூருன் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ரூ. 9.55 லட்சம் கோடியுடன் இருக்கிறார். அதானி ரூ. 8.15 லட்சம் கோடியுடன் இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ரூ.21,190 கோடி சொத்துடன், இளம் தொழிலதிபர்களில் முன்னணி இடம் பெற்றுள்ளார். இவர் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட் பேஸ்ட் தேடுபொறியை வழங்குகிறது, இது பயனர்களின் கேள்விகளுக்கு விரைவான, துல்லியமான பதில்களை வழங்கும் திறன் கொண்டது.
1994ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி சென்னையில் பிறந்த அரவிந்த், சிறு வயதிலிருந்தே அறிவியல் ஆர்வத்துடன் வளர்ந்தார். சென்னை ஐஐடியில் படித்தபோது ‘ரெயின்ஃபோர்ஸ்மென்ட் லேர்னிங்’ பாடங்களை கற்பித்துள்ளார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். கம்ப்யூட்டர் விஷன், இமேஜ் ஜெனரேஷன் மற்றும் வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஓபன்ஏஐ, டீப்மைண்ட் மற்றும் கூகுள் போன்ற இடங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அரவிந்த், ஆகஸ்ட் 2022ல் டெனிஸ் யாரட்ஸ் மற்றும் ஆன்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் இணைந்து பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவத்தை நிறுவினார். இளம் வயதிலேயே இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரராக அவர் உருவெடுத்துள்ளார், தொழில்நுட்ப உலகில் புதிய முன்னெச்சரிக்கை நிலையை வகிக்கிறார்.