கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ‘ஏ’ அணி மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மழையால் ரத்து செய்யப்பட்ட முதல் போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த ஆட்டம் சிறப்பாக நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது, இதை பயன்படுத்திக் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே ரன்கள் குவித்தனர்.

தொடக்கத்தில் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் திடீர் வேகத்தில் ரன்களை குவித்தனர். இருவரும் சேர்ந்து 135 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் 56 ரன்னில் அவுட்டானார். ஆனால் ஆர்யா 84 பந்துகளில் சதம் அடித்து (101 ரன்) ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ரியான் பராக் 42 பந்துகளில் 67 ரன் அடித்து அணிக்கு வலுவான நிலையை ஏற்படுத்தினார்.
அதன் பின்னர் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டத்தை இன்னும் உயர் நிலைக்கு கொண்டு சென்றார். அவர் 83 பந்துகளில் 110 ரன் அடித்து பவுண்டரி மழையை பொழிந்தார். அதோடு, ஆயுஷ் படோனி 27 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்தியா ‘ஏ’ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 413 ரன்களை குவித்தது.
பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி, இந்திய பந்துவீச்சுக்கு சரியான பதிலளிக்க முடியவில்லை. 33.1 ஓவரில் 242 ரன்னில் அவர்கள் ஆல் அவுட்டானனர். நிஷாந்த் 4 விக்கெட் குவித்தார். இதன் மூலம் இந்தியா ‘ஏ’ அணி 172 ரன் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.