கராச்சி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சோயப் மாலிக் மீண்டும் தனது தனிப்பட்ட வாழ்க்கையால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளார். மூன்றாவது மனைவியாக நடிகை சனா ஜாவேத்துடன் திருமணம் செய்து ஒரு ஆண்டே ஆன நிலையில், இப்போது இவர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தி வெளியிட்டுள்ளன.
2024 ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்ட சோயப்-சனா தம்பதிகள், அந்த நேரத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளானனர். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பே சோயப் தனது முதல் மனைவி சானியா மிர்சாவுடன் விவாகரத்து பெற்றிருந்தார். சானியாவுடனான திருமணம் 14 ஆண்டுகள் நீடித்தது; அவர்களுக்கு இஜான் என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியாகிய வீடியோவில், சோயப் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கிக்கொண்டிருக்கிறார். அருகில் இருந்த சனா ஜாவேத், முகத்தைத் திருப்பிக் கொண்டு அவரை நோக்காமல் நிற்பது காட்சியளிக்கிறது. அந்த வீடியோ வைரலாகி, இருவருக்கும் இடையே உறவு பிரச்சினை தீவிரமாகியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இதுவரை சோயப் மாலிக்கோ அல்லது சனா ஜாவேத்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை. ஆனால் “சோயப் மாலிக்கின் மூன்றாவது திருமணமும் உடைந்து போகிறதா?” என்ற கேள்வி ரசிகர்களிடையே தீவிரமாக எழுந்துள்ளது. சானியாவுடன் விவாகரத்துக்குப் பிறகு ஆரம்பித்த புதிய உறவிலும் அமைதி நிலவவில்லை என்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.