சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் போதும், வெள்ளி விலையும் அதனுடன் போட்டியிட்டு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.29 மற்றும் கிலோவுக்கு ரூ.29,000 அதிகரித்துள்ளது. இதனால் நகை வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். நிபுணர்கள் இதன் காரணங்கள் மற்றும் எதிர்கால நிலவரத்தை விளக்கியுள்ளனர்.

தங்கம் விலை கடந்த ஆண்டே அதிகரித்த நிலையில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெள்ளி விலை நினைத்ததுக்கு மீறி தினமும் உயர்வு காணப்படுகிறது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.165 மற்றும் ஒரு கிலோ ரூ.1,65,000 விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விலை அதிகரித்ததன் காரணமாக, மேலும் உயர்வே எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. முதலீட்டாளர்கள் அதிகமாக வெள்ளியை வாங்கி முதலீடு செய்து வருவது, சர்வதேச பொருளாதார சூழ்நிலை, போர் பதற்றம் போன்ற காரணங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெள்ளி மின்சாதனங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், விமான உற்பத்தி, மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய மின்சார உற்பத்தியில் அதன் கோரிக்கை அதிகரித்து வருகிறது.
பொருளாதார நிபுணர்கள் எதிர்காலத்தில் தங்கத்தைவிட வெள்ளியில் லாபம் அதிகரிக்கும் என மதிப்பீடு செய்கின்றனர். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் வெள்ளியின் மீது கவனம் செலுத்தி அதிகமாக வாங்கி குவித்து வருகிறார்கள். நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷாலானி கூறியதாவது, “வெள்ளி விலை குறைய வாய்ப்பு இல்லை. வரும் நாட்களில் இதைவிட பல மடங்கு உயரும்.”