சென்னை: கோலிவுட் தம்பதிகளில் தேவயானி மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் சிறப்பாக நினைவில் நிற்பவர்கள். தேவயானி தனது அழகும் நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அவரை காதலித்து திருமணம் செய்த ராஜகுமாரன் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியிருந்தாலும், பின்னர் சினிமாவிலிருந்து ஓரளவு விலகி இருந்தார். தற்போது அவர் கூறிய ஒரு கருத்து ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜகுமாரன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டியில், “வெற்றிமாறனின் எந்த ஒரு படத்தையும் முழுவதுமாக பார்த்ததில்லை. அவர் ஒரு சிறந்த இயக்குநர்தான், ஆனால் அவரது படங்கள் எனக்கு மிகவும் இரிடேட்டாக இருக்கும்,” என்று கூறினார். இதோடு பா. இரஞ்சித் படங்களையும் விரும்பிப் பார்ப்பதில்லை என தெரிவித்தார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல ரசிகர்களின் கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது.
ரசிகர்கள், “தான் இயக்கிய படங்கள் வெற்றியடையவில்லை என்றால் அதற்காக மற்றவர்களை விமர்சிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், வெற்றிமாறன் மற்றும் பா. இரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சமூக பிரச்சினைகள் குறித்து தங்கள் படங்களில் உரையாடுகின்றனர் என்பதால், அவர்களை இப்படி குறை கூறுவது தேவையற்றது என கருத்து தெரிவித்துள்ளனர்.
தேவயானி தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் ராஜகுமாரனின் இந்த பேட்டி அவர்களது குடும்பத்தையே மீண்டும் ஊடக கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. ரசிகர்கள் பலரும் “தேவயானி கணவருக்கு இது தேவையா?” என்று கேட்கும் அளவிற்கு இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.