ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற கப்பல் குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதில் பங்கேற்ற ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மீது துன்புறுத்தல் நடந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இஸ்ரேல் அதனை முற்றிலும் பொய் எனத் தள்ளுபடி செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்துவரும் நிலையில், காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இதனால், பல நாடுகளின் தன்னார்வ குழுக்கள் ‘குளோபல் சுமூத் பிளோட்டில்லா’ எனும் முயற்சியின் கீழ் கப்பல் மூலம் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் அனுப்ப முயன்றன. ஆனால் இஸ்ரேல் ராணுவம் கடல் எல்லையில் கப்பலை தடுத்து, அதிலிருந்த பலரையும் கைது செய்தது.
அவர்களில் சிலர், “இஸ்ரேல் ராணுவம் மனிதாபிமான விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது. கிரெட்டாவை கொடியை அணியச் செய்து அவமதித்தனர்” என்று கூறினர். இதன் பின்புலத்தில் உலகளாவிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதற்கு பதிலளித்த இஸ்ரேல் ராணுவம், “கிரெட்டா மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் மீது எந்த வித துன்புறுத்தலும் நடைபெறவில்லை. அனைத்து கைதிகளின் உரிமைகளும் மதிக்கப்பட்டன” என விளக்கம் அளித்துள்ளது.
மேலும், “சில செயற்பாட்டாளர்கள் தாங்களே தங்கள் நாடு கடத்தலை தாமதப்படுத்தி காவலில் நீண்டநாள் இருக்க விரும்பினர்” என்றும் கூறப்பட்டது. இதனால், கிரெட்டா தன்பெர்க் சம்பவம் குறித்த சர்ச்சை மீண்டும் புதிய திருப்பம் எடுத்துள்ளது. சர்வதேச அமைப்புகள் இதற்கான சுயாதீன விசாரணையை கோரியுள்ளன.