சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலம் பெற்று வீடு திரும்பிய நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பலரும் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.

ராமதாஸ் சமீபத்தில் இருதய கோளாறால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன், அவரை பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். திருமாவளவன் மட்டும் நேரில் சந்திக்கமல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் பாமக தலைவர் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்ததாக பதிவிட்டார்.
அதே சமயம், பாமக மற்றும் திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற செய்திகள் முன்பே வெளிவந்திருந்தன. திருமாவளவன் இதற்கு எதிராக இருந்தாலும், தற்போது ராமதாஸை நேரடியாக தொடர்பு கொண்டிருப்பது புதிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திமுக கூட்டணியில் இரு தரப்புகளையும் இணைக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராமதாஸ் கடந்த சில மாதங்களாக திமுக அரசை விமர்சிக்காமல் அமைதியாக இருந்து வருவது, திருமாவளவனின் இந்த அழைப்புடன் இணைந்து ஒரு புதிய அரசியல் புரிதலாக மாறுமா என்பது ஆர்வத்தை கிளப்பியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் புதிய மாற்றங்கள் உருவாகும் வாய்ப்பும் இப்போது அதிகரித்துள்ளது.