கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த விபத்து தற்போது புதிய திருப்பம் பெற்றுள்ளது. இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், அந்த வாகனங்கள் விஜய்யின் பிரச்சார பஸ்சை மோதியதாகவும், விபத்துக்குப் பிறகும் பேருந்து நிற்காமல் சென்றதாகவும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவத்தைப் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடும் கேள்விகள் எழுப்பியது. “மோதிவிட்டு சென்ற வழக்கு ஏன் பதிவு செய்யப்படவில்லை? பேருந்து ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை?” என நீதிபதி வினவியதால், சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டு, பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படை போலீசார், பேருந்தை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்த நேரத்திலும் பஸ்சை பறிமுதல் செய்யும் உத்தரவு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ்சின் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக த.வெ.க. தொண்டர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய்யின் பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேசமயம், சென்னையில் உள்ள போலீசாரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.