கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெறும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் பேச்சாளரான ராஜ்மோகன் தலைமறைவாகியதாக தகவல் வெளியானது. புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தனர்.

ராஜ்மோகனும் இதேபோல் 10 நாட்களாக சமூக வலைதளங்களில் எந்த பதிவும் இல்லாமல் இருந்ததால் பல்வேறு வதந்திகள் கிளம்பின. சிலர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம், அல்லது கைது அச்சத்தால் மறைந்து இருப்பார் என கூறினர். இதனால் கட்சித் தளங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், ராஜ்மோகன் தனது எக்ஸ் பதிவில் “வேதனையில் இருந்து மீள முடியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியில் பங்கெடுப்பதற்காக அமைதியாக இருந்தேன். அந்த அமைதியை அரசியல் வதந்திகளாக மாற்ற வேண்டாம். என்மீது பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் வெறுப்புகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவுடன் அவர் சமூக வலைதளத்தில் மீண்டும் செயலில் ஈடுபட்டுள்ளார். ராஜ்மோகனின் விளக்கம் தவெக ஆதரவாளர்களுக்கு நிம்மதியளித்தாலும், விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் அவரது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.