சென்னை: உலக தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் செய்தித் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை வளர்ச்சிக் கழகம் மற்றும் சர்வதேச கழகம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து நடத்தும் 2வது உலகத் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா மண்டபத்தில் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ்.ரகுபதி, எம்.பி.சாமிநாதன், எம்.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம், மூத்த தமிழறிஞர்கள் சுந்தரமூர்த்தி, கே.வி.பாலசுப்ரமணியம், அப்துல்காதர் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
இம்மாநாட்டில் அறிவியல் தமிழ், சட்டத் தமிழ், மருத்துவத் தமிழ், செயற்கை நுண்ணறிவுத் துறையில் தமிழ் போன்றவற்றில் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். . இத்தகவலை சென்னை வளர்ச்சி சங்கத்தின் தலைவரும், உலக தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.