செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’ மற்றும் விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த எஸ்.எஸ். லலித்குமார் இதன் தயாரிப்பாளர். அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார் ‘சிறை’ மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அனந்தா மற்றும் அனிஷ்மா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மேலும் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்த இந்தப் படத்தை வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.

‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் தனது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதையை எழுதியுள்ளார். இந்தப் படம் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு விசாரணைக் கைதியின் பயணத்தைச் சுற்றி வருகிறது. கதை சிவகங்கையின் பின்னணியில் நடைபெறுகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளதுடன், படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, படம் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும்.