சென்னை: “நீதி வெல்லும்” எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் திடீர் ரியாக்ஷன் அளித்துள்ளார். கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதன் பின்னர் சில நிமிடங்களுக்குள்ளேயே விஜய் தனது ட்வீட்டை வெளியிட்டார்.

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்ஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், எஸ்ஐடி விசாரணையை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், அந்த விசாரணையை ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கண்காணிப்பார் என்றும் தெரிவித்தது. இதனால் விஜய்க்கு சாதகமான தீர்ப்பு கிடைத்ததாகக் கருதப்படுகிறது. இதை வரவேற்று விஜய் தனது பதிவில் “நீதி வெல்லும்” எனச் சுருக்கமாகக் கூறியுள்ளார்.
இந்த ட்வீட் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல தவெக தொண்டர்கள், ரசிகர்கள் விஜயின் கருத்தை பாராட்டி “நீதியின் வெற்றி தொடங்கிவிட்டது” எனக் கூறி வருகிறார்கள். எதிர்க்கட்சியினரும் இதை அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிரான முக்கிய தீர்ப்பாக வர்ணித்து வருகின்றனர். கரூர் வழக்கின் சிபிஐ விசாரணை தொடங்கியவுடன் மேலும் பல அதிர்வுகள் அரசியல் வட்டாரத்தில் உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது.