சென்னை: பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 5-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்டக்குழு துணைத் தலைவர் பேரா சிரியர் ஜெயரஞ்சன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.
புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் வருகையும் பள்ளியில் அதிகரித்துள்ளது.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்ட மும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்தும் திட்டமாக உள்ளது.
மாநில திட்டக் குழுவின் அறிக்கைதான் தி.மு.க. அரசின் மதிப்பெண் சான்றிதழ் ஆகும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆலோசனைகளையும் வழங்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.