சென்னை: சமூகநீதியை மையமாகக் கொண்ட கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜின் புதிய படம் பைசன் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், பசுபதி பாண்டியன் சம்பவத்தை தழுவியதாக கூறப்படுகிறது. ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற சமூக அடிப்படையிலான படங்கள் மூலம் ஹிட் அடித்த மாரி செல்வராஜின் அடுத்த வெற்றியாக பைசன் அமையும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இதனிடையே, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதியை ஹீரோவாக மாரி செல்வராஜ் அறிமுகப்படுத்தப் போவதாக செய்திகள் பரவின. இன்பன் தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் பட உலகில் நுழைவதற்கான முயற்சியாக இது பார்க்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இதற்கான உற்சாகம் பெருகிய நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. உதயநிதி ஸ்டாலின் எனக்கு நெருக்கமானவர், அடிக்கடி சந்தித்து பேசுவோம். இன்பா தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரை நான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், எனக்கும் நேரம் சரியாக இருந்தால், நான் சொல்லும் கதை அவர்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அது நடக்கும்,” என தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தன்னுடைய அடுத்த திட்டம் நடிகர் தனுஷை வைத்து ஒரு பெரிய படம் என்றும், அதை முடிக்க ஒரு வருடம் ஆகும் என்றும் கூறினார்.
இவ்வாறு அவர் அளித்த விளக்கம் ரசிகர்களிடையே புதிய ஆர்வத்தை தூண்டியுள்ளது. மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணி பைசன் சமூகத்தில் மீண்டும் தீவிரமான விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைசன் வெளியீட்டுக்குப் பின் இன்பன் உதயநிதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.