சென்னை: பைசன் கதை தென்மாவட்ட இளைஞர்களின் கனவு, ஆனால் திரைக்கதை என்று இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட ‘பைசன்’ படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர், பாடல்கள், டிரெய்லர் ஆகியவை ரசிகர்களை வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பைசன் படத்தின் திரைக்கதை புனைவு என்றும் உண்மை சம்பவம் இல்லை என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பைசன் (காளமாடன்) இத்திரைப்படம் எனது பால்யகால நாயகன் “மணத்தி” P.கணேசன் அவர்களின் வாழ்வையும் உழைப்பையும் கபடியையும் அவர் அடைந்த பெரு வெற்றியையும் கருவாக வைத்து உருவாக்கப்பட்டது தான் என்றாலும் இத்திரைக்கதை பல தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வையும் ஏக்கத்தையும் கனவையும் வலிகளையும் சேர்த்து புனையப்பட்ட ஒரு முழு புனைவு திரைக்கதையே ஆகும்.
ஆகவே இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் என இத்திரைக்கதையில் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் என் ஆன்மாவின் புனைவே தவிர யாரையும் எந்த நிகழ்வுகளையும் உண்மையாக காட்டப்படவேயில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். பைசன் (காளமாடன்) என்பவன் நிச்சயம் ஒருவன் அல்ல, தென்மாவட்டத்தில் தன் இலக்கை நோக்கி பயணிக்க துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் சாயலை கொண்டவன்தான் என் காளமாடன்” என்று தெரிவித்துள்ளார்.