மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அக்டோபர் 25ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். அன்றைய தினம் இரவு 7 மணியளவில் விமானம் மூலம் கோவை வருகிறார். அவர் அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நாள், 26ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கோவை பீளமேட்டில் புதியதாக கட்டப்பட்ட பா.ஜ.க அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

மொத்தம் 25 சென்ட் பரப்பளவில், 12,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம் கோவையில் பாஜக அமைப்புக்கு ஒரு முக்கிய மையமாக இருக்கும் என கூறப்படுகிறது. அலுவலக திறப்பு விழா முடிந்த பின், மதியம் 1 மணிக்கு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டு, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சியின் வியூகங்கள், கூட்டணிக் கொள்கைகள், மற்றும் பிரச்சாரத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாநிலத்தில் பாஜக வலிமையை கூட்டுவது மற்றும் மாவட்ட அளவில் பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திமுக ஆட்சிக்கு எதிரான பிரச்சாரங்கள், கூட்டணிக் கட்சிகளின் பங்கு, மற்றும் அடுத்த கட்ட தேர்தல் பிரசார தளங்கள் குறித்து அமித் ஷா வழிகாட்டவுள்ளார்.
மாலை 5.30 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படவுள்ளார். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திலிருந்து கட்சி அலுவலகம் வரை மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.