பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை அக்டோபர் 24ம் தேதி தொடங்க உள்ளார். சமஸ்திபூர் மாவட்டத்தில் நடைபெறும் இரண்டு பெரிய பொதுக்கூட்டங்களுடன் அவர் பிரச்சாரத்தை தொடங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜைஸ்வால் தெரிவித்தார். இதன் மூலம் பீகாரில் பாஜக-என்டிஏ கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் துவங்குகின்றன.

மாநில பாஜக தலைவர்களின் தகவலின்படி, பிரதமர் மோடியின் இரண்டாவது பிரச்சார பயணம் அக்டோபர் 29ம் தேதி நடைபெறும். மொத்தம் 10 பெரிய பொதுக்கூட்டங்கள் பீகாரின் முக்கிய மாவட்டங்களில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா 25 பெரிய கூட்டங்களில் பேசவுள்ளதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் தேர்தல் ரோட்மேப் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், 40 முக்கிய பிரச்சாரக்காரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளதாக திலீப் ஜைஸ்வால் கூறினார். சத்த் பண்டிகை காலத்தில் பிரதமர் பீகாருக்கு வருவது பற்றிய கேள்விக்கு அவர், “அந்தக் காலத்தில் மக்கள் திரளாகக் கூடுவார்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பிரதமர் வருவது திட்டத்தில் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும். பிரதமர் மோடியின் பிரச்சார துவக்கம் பீகார் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. தற்போதைய ஆட்சியில் தொடர விரும்பும் என்டிஏ கூட்டணிக்கு இது முக்கியமான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.