வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்த திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக தடுத்துள்ளனர். இந்த சம்பவம் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.
பல்வேறு சர்வதேச பிரச்சினைகளில் தலையிட்டு வருவதால் டிரம்ப் மீது தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல்கள் எழுந்து வருகின்றன. 2024 ஜூலையில் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தின் போது, அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவரது காதில் குண்டு காயம் ஏற்பட்டது. பின்னர், கோல்ஃப் மைதானத்தில் மீண்டும் கொலை முயற்சியில் ஈடுபட்ட 59 வயது ரியான் வெஸ்லே கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில், பாம் பீச் விமான நிலையத்தின் அருகே ஏர் போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் திசையில் துப்பாக்கி ஒன்று தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அமெரிக்க ரகசிய சேவை பிரிவினர் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக டிரம்ப் உயரம் குறைவான படிக்கட்டுகள் வழியாக விமானத்தில் ஏறினார். “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது; தற்போது சந்தேகநபர்கள் எவரும் காணப்படவில்லை,” என எப்பிஐ இயக்குனர் காஷ் படேல் தெரிவித்தார்.