பெங்களூர்: ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய் கவிழ்ந்து சென்ற வாலிபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் தலைக்கவசத்திற்கு பதிலாக சமையல் பாத்திரத்தை (கடாய்) வாலிபர் ஒருவர் அணிந்து சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
போக்குவரத்து காவல் துறையின் அபராதத்திற்கு அஞ்சி, கடாயை தலையில் கவிழ்த்துக்கொண்டு வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு இருக்கும் வீடியோவில் பலர், கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். தலைக்கவசம் இல்லாமல் வருவதற்கு பதிலாக, தலையில் கவசம் போல எதையாவது கவிழ்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வாலிபர் செல்வது, அவரின் போக்குவரத்து விதிகளை மீறாத தன்மையையே காட்டுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை கர்நாடக போக்குவரத்து காவல் துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ரூபனா அக்ரஹாரா பகுதியில் நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்தவர் தலைக்கவசத்திற்கு பதிலாக கடாயை அணிந்துள்ளார்.
முட்டையை ஆம்லெட் போடுவதற்கு கடாய் பயன்படுமே தவிர, விபத்திலிருந்து தலையைக் காப்பாற்றுவதற்கு அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுபோன்று பயணத்தின்போது பாதுகாப்பற்ற உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.