சென்னை: பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபாதா, சமூக வலைதளங்களில் தன்னை இழிவுபடுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்களை வெளியிட்டவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நடிகையின் மார்பிங் போட்டோவைப் பார்த்து அதை வன்மையாகக் கண்டித்து, போலீசில் புகார் அளித்திருந்தார் சின்மயி.
அதற்குப் பதிலடியாக, அவரது போட்டோக்களையே மார்பிங் செய்து மிக மோசமான கேப்ஷன்களுடன் பதிவிட்டுள்ளனர் சிலர். இதனால் ஆத்திரமடைந்த சின்மயி, அந்த போட்டோக்களையும் கமெண்ட் செய்தவர்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
வீடியோவில் சின்மயி கூறுகையில், “பெண்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும், ஆண்களுக்கு அடங்கி போக வேண்டும் என்ற ஆணாதிக்க எண்ணம் இன்னும் சமூகத்தில் உள்ளது. அடங்கிப் போகாத பெண்களைத் தான் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். எதிர்த்துக் கேள்வி
கேட்கும் பெண்களைத் தான் தவறாக சித்தரிக்கிறார்கள். மார்பிங் போட்டோக்களை உருவாக்கும் இந்தக் குரூர புத்தி கொண்ட ஆண்களுக்கு இதைத் தவிர வேறு எதுவும் தெரியாது” என்று கடுமையாகச் சாடினார்.
சின்மயி தொடர்ந்து, “இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல; பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான அவமானம். இதை எதிர்த்துப் பேசினால் மீண்டும் இதே போல் செய்வார்கள். ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்” என்று தெளிவுபடுத்தினார். மார்பிங் போட்டோக்களை வெளியிட்டவர்களின் அக்கவுண்ட்களை டேக் செய்து, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த சில ஆண்டுகளாக #MeToo இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் சின்மயி.
இதனால் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான ட்ரோல், அவதூறு பரவுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இம்முறை மார்பிங் போட்டோக்கள் மிக மோசமான அளவுக்குச் சென்றதால், சின்மயி வழக்கம்போல் அமைதியாக இல்லாமல் நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.