கேரளா: உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.
ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்” என்று தெரிவித்தார்.