அமெரிக்கா: கழிவறை இருக்கைக்கு அடியில் குண்டுகள்… அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கழிவறை இருக்கைகளுக்கு அடியில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷ் டப் கார் வாஷிங் நிறுவனத்தின் கிளை நிலையங்களில் உள்ள கழிவறைகளில் சமீபமாக அடுத்தடுத்து சிறிய அளவிலான வெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே, நிலையங்களில் உள்ள கழிவறை இருக்கைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டுகள் அழுத்தத்தினால் வெடிக்கக்கூடியவை.அதாவது, யாரேனும் கழிவறை இருக்கைகளில் அமர்ந்து வெடிகுண்டுக்குத் தேவையான அளவு அழுத்தம் ஏற்படும் பட்சத்தில் அவை வெடிக்கும். இவை சிறிய அளவிலான சேதத்தையே ஏற்படுத்தும். இதுபோன்ற வெடிவிபத்துகள் கடந்த ஜூலை 19, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடந்துள்ளது. சமீபத்திய வெடி விபத்தில் பெண் கஸ்டமர் ஒருவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் நபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் அனைத்து கிளைகளுக்கும் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் வாஷ் டப் புகார் அளித்தது. தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய போலீஸ், அல்டென் என்ற நபரை கைது செய்தது. அல்டென் அந்நிறுவனத்தின் வாடிக்கை கஸ்டமர் என்றும், வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.