சேலம்: வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே… என் வீடு எது தெரியுமா என்று சேலத்தில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜய், என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்களே, என் வீடு எது என்று தெரியுமா? என்று கேட்டு தன்னுடைய பேச்சைத் தொடங்கியிருக்கிறார்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசத் தொடங்கினார்.
அவர் பேசுகையில், இந்த உத்வேகம்தான் ஒரு சக்தியைக் கொடுக்கும். அது மட்டுமல்ல, மற்றவர்கள் நம்மை ஏளனமாகப் பார்க்கும் நேரத்தில், நம்மைக் குறைவாக எடைபோடும் நேரத்தில் தான் உத்வேகம் பிறக்கும். நாம் யார் என்று காட்ட வேண்டும் என்ற உத்வேகம் வரும். எந்த விஷயத்தில் நம்மை கிண்டலும் கேலியுமாகப் பேசினார்களோ அந்த விஷயத்தில் நம்மை நேர்மறையாக மாற்றுவதற்கு உத்வேகம் வரும். அங்கிருந்துதான் அந்த சக்தி உருவாகிறது என்று பேசினார்.