சென்னை: நடிகர் சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரி, ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படம் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார்.
சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரூ.75 கோடி செலவில் உருவாகிறது.
சமீபத்தில் வெளியான ‘மண்டாடி மண்டாடி’ முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 2-வது பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ வெளியாகியுள்ளது. ஜெயஸ்ரீ மதிமாறன் வரிகளில் கபில் கபிலன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இணைந்து பாடியுள்ளனர்.
