சென்னை: நடிகை சகோதரிகள் அம்பிகா–ராதா இடையேயான சொத்து விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன் மீது கூறப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளுக்கு அம்பிகா விளக்கம் அளித்துள்ளார். மேலும், சொத்து பிரச்னையை தீர்ப்பதற்காக காசோலை வழங்கியதும் ராதாதான் என்றும், பின்னர் அந்த காசோலையை நிறுத்தியதும் அவரே என்றும் அம்பிகா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக இருந்த சகோதரிகள் அம்பிகா, ராதா ஆகியோருக்கு சென்னையில் ஏஆர்எஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்து தொடர்பாக ராதா சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தனது வீட்டில் இருந்த காசோலை திருடப்பட்டதாகவும், அதை பயன்படுத்தி அம்பிகா மற்றும் அவர்களது சகோதரர் மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் ஆகியோர் ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாகவும் ராதா குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய ராதா, தன்னை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அம்பிகா, ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான சொத்து பிரச்னையில்தான் தற்போதைய மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஏஆர்எஸ் கார்டன் உருவாக தன்னுடைய உழைப்பும் முக்கிய காரணம் என்றும், தனது பெயரில் இருந்த சொத்துப் பங்கில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய பெயரில் இருந்த தங்க நகைகளும் ராதாவிடம் இருப்பதாக அம்பிகா குற்றம்சாட்டினார். சொத்து பிரச்னையை தீர்ப்பதற்காக ராதா காசோலை வழங்கியதாகவும், பின்னர் அந்த காசோலை நிறுத்தப்பட்டதால் பணம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறினார்.
“காசோலையில் கையெழுத்திட்டுவிட்டு அதை வீட்டில் ஏன் வைத்திருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பிய அம்பிகா, தன்னை திருடியதாக கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
மேலும், குடும்ப சொத்து விவகாரத்தில் ராதாவிடம் இருந்து தங்களுக்கு ரூ.97 கோடி வர வேண்டியுள்ளது என்றும் அம்பிகா கூறினார். தான் உண்மையை முழுமையாக வெளியில் கூறினால் ராதாவுக்கே சட்ட சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சொத்து மற்றும் காசோலை தொடர்பான விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளும் சட்டரீதியாக நிரூபிக்கப்பட வேண்டியவையாகும்.
