பழனி: பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் இன்று அதிகாலை தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் பழனிக்கு வந்தார். காலை சுமார் 6 மணியளவில் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை வழியாக குடும்பத்தினருடன் மலைக்குச் சென்றார்.
மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற தனுஷ், பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாடுகளை முடித்த பின்னர் சிறிது நேரம் கோவிலில் இருந்த அவர், பின்னர் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்தார்.
தனுஷை காண திரண்ட பக்தர்கள்
தனுஷ் வருகையை அறிந்த பக்தர்கள் அவரை காண ஆர்வம் காட்டினர். மலைக்கோவில் பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாத நிலையில், அடிவாரத்தில் தனுஷை பார்த்த பலர் செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கு முன்பாக சிவகங்கை மாவட்டத்தில் தனது புதிய படமான D56 படப்பிடிப்பு தொடக்க நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பழனி கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.
தனுஷின் அடுத்தடுத்த திரைப்படப் பணிகளுக்கு மத்தியில், குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
