கோவை: கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நடந்த சர்வதேச கூட்டு விமானப்படை பயிற்சி ‘தரங்சக்தி 2024’ நேற்றுடன் நிறைவடைந்தது.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் சர்வதேச விமானப்படையின் கூட்டுப் பயிற்சி ‘தரங் சக்தி 2024’ கடந்த 8 நாட்களாக நடைபெற்றது. இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் விமானப்படைகள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய விமானப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நடந்த சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் தேஜாஸ், சுகோய், மிக் போர் விமானங்களில் வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். மேலும், ஜெர்மன் டைபூன் போர் விமானங்களும், ரஃபேல் போர் விமானங்களும் பங்கேற்றன.
கூட்டு விமானப் பயிற்சியில் பங்கேற்ற விமானப்படைத் தளபதிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக விமானப்படை தள வளாகத்தில் ராணுவ உபகரணங்கள் கண்காட்சியை ஆளுநர் தொடங்கி வைத்தார். இங்கு அமைக்கப்பட்ட 62 அரங்குகளில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிநவீன தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.