சென்னை: கோவில் திருவிழாக்கள் மற்றும் மத வழிபாடுகளில் யானைகளை பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக சிறப்பு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சேவா அறக்கட்டளை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனுடன், அசாமில் இருந்து 5 யானைகளை தமிழக கோவில்களுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதலை பெற வேண்டும் என விலங்குகள் நல அமைப்புகள் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
இதையடுத்து தலைமை வனப் பாதுகாவலர், இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் கால்நடை நிபுணர்கள் அடங்கிய குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது.
யானைகளின் உடல்நிலை பரிசோதனை, மாவட்ட அளவிலான பதிவு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது வழங்க வேண்டிய ஓய்வு, பிரத்யேக வாகனங்கள், பட்டாசு மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளில் இருந்து பாதுகாப்பான இடைவெளி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து குழு விதிமுறைகளை வகுக்க வேண்டும். 4 வாரங்களில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
