சென்னை: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளான அக்டோபர் 29-ஆம் தேதி, தான் வளர்ந்த சென்னை ராயபுரம் பகுதியில் இந்தத் திட்டத்தைத் தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளாகப் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், இதய அறுவை சிகிச்சைகளுக்கான நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்தல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அறக்கட்டளை மேற்கொண்டு வந்துள்ளது.
தேவையுள்ள மக்களுக்கு உதவி செய்யச் சென்றபோது, ஒரு பெண் தனக்குப் பட்டுப்புடவை வேண்டும் என்று கடிதம் வழங்கியதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் தன்னைச் சிந்திக்க வைத்ததாகவும், கிராமப்புறங்களில் பல பெண்களுக்கு வாழ்நாளில் பட்டுப்புடவை அணியும் வாய்ப்புகூடக் கிடைக்காமல் இருக்கலாம் என்று உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதுமே இந்த முயற்சியின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
