கோவை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் விமான நிலையம் விரிவாக்கத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தின் ஓடுபாதை தூரம் குறைவாக இருப்பதால், வெளிநாட்டு விமானங்கள் இங்கு இறங்க முடியாத நிலை உள்ளது. இதனால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகி உள்ளது.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார். மொத்தம் 632 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதில் 468.83 ஏக்கர் தனியார் பட்டா நிலங்கள், 134.32 ஏக்கர் ராணுவம் சொந்தமான நிலங்கள் மற்றும் 29.82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் அடங்கும்.
இந்த விரிவாக்கத்தின் காரணமாக, இருகூர் முதல் சின்னியம்பாளையம் வரை செல்லும் சாலை தடைபடும் என்பதால், மாற்று சாலை அமைக்கப்பட உள்ளது. எல் அண்டு டி சாலை இருகூர் வழியாக விமான நிலையத்தை அணுகக்கூடிய வகையில் அமைக்கப்படும்.
முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் இந்த விஷயத்தில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கணபதி ராஜ்குமார் எம்பி கூறினார்.