சென்னை: அகில இந்திய அளவில் 12 அணிகள் பங்கேற்றுள்ள புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. திருநெல்வேலியில் மத்திய பிரதேசம் – ஜார்கண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த மத்திய பிரதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
ஷுபம் குஷ்வா 87 ரன்களும், அர்ஹம் அகில் 57 ரன்களும் சேர்த்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் சுபம் சிங், சவுரப் சேகர், விவேக் ஆனந்த் திவாரி, ஆதித்யா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சேலத்தில் நடந்த போட்டியில் இந்தியன் ரயில்வே, குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி முதல் நாளில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 429 ரன்கள் எடுத்தது. பிரதம் சிங் 130, விவேக் சிங் 104, சிவம் சவுத்ரி 88, முகமது சைஃப் 57 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணி சார்பில் சித்தார்த் தேசாய் 3 விக்கெட்டும், சிந்தன் கஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கோவையில் நடந்த போட்டியில் ஹரியானா, மும்பை அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஹரியானா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. நிஷாந்த் சிந்து 91 ரன்களும், திரு சிங் 130 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி சார்பில் சில்வஸ்டர் டிசோசா, அதர்வா அன்கோலேகர், ஜுனைத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.