மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,500 கன அடியாக உள்ளது. அதேபோல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியை எட்டியுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறையும். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் கடந்த 12ம் தேதி இரண்டாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,500 கன அடியாக உள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர்மின் நிலையங்கள் மூலம் வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
ஒகேனக்கல்லில் மாற்றமில்லை… கடந்த 14ம் தேதி காலை தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாகவும், அன்று மாலை 16 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது. கடந்த 15ம் தேதி காலை அளவீட்டில் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் குறைந்த நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை அளவீட்டின்போதும் அதே அளவு நீடிக்கிறது.