சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தங்கும் வகையில் புதிய ஓட்டல்களை அமைப்பது குறித்து, சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள், ஓட்டல் மேலாளர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் தலைமையில், முன்னணி ஓட்டல் நிர்வாகிகள், சுற்றுலாத் தொழில் முனைவோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை ஆணையரும், சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சுற்றுலாத் துறைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, அதிக தேவை மற்றும் முக்கிய பகுதிகள் மற்றும் புதிய ஓட்டல்கள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் ஆன்மிக சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருப்பதால், ராமேஸ்வரத்தில் உலகத்தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் கட்டவும், அழகிய கடற்கரைகளில் கடல் அழகை ரசிக்க ஏற்ற இடங்களை தேர்வு செய்யவும், நீர் சாகச விளையாட்டுகளை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரையிலான இடங்களை தேர்வு செய்து புதிய சுற்றுலா விடுதிகள் கட்டலாம் என்றும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்து, ஜவ்வாது மலை, வாத்தல் மலை, பச்சிமலை, திருமூர்த்தி மலை போன்ற இடங்களில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்கள்.
கோயில் நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு விடுதிகளைத் தொடங்கலாம். புதிய சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிதாக கட்டப்படும் விமான நிலையத்திற்கு அருகிலும், கல்பாக்கம் முதல் மரக்காணம் வரையிலும் நட்சத்திர ஓட்டல்கள் அமைக்கலாம் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. புதிய ஹோட்டல்களை அமைப்பதற்கு நிலம் தேவைப்படும் இடங்களை தேர்வு செய்ய தேவையான நிலத்தின் அளவு மற்றும் இடம் குறித்து தெரிவிக்குமாறு சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.