சென்னை: சென்னை ஐஐடியில், மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் உதவியுடன், 16.5 கோடி ரூபாய் செலவில், அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடிக்கு ரூ.16.5 கோடி வழங்கியுள்ளது. இந்த நிதியில் ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் அதிநவீன உடற்கூறியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.
ஐஐடியில் பிஎஸ் மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு இந்த ஆய்வகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அதிநவீன ஆய்வகத்தை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி முன்னிலையில் பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பர்மிந்தர் சோப்ரா நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “நவீன மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கவும், மருத்துவ சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறியவும் இந்த ஆய்வகம் உதவும்,” என்றார்.
புதிய கண்டுபிடிப்புகள்: ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், ”மருத்துவ அறிவியலுடன் உயர் தொழில்நுட்பங்களை இணைத்தால், எதிர்கால மருத்துவத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளுக்கு தனித்துவமான தளத்தை உருவாக்க முடியும்,” என்றார்.
பவர் ஃபைனான்ஸ் இயக்குநர் (வணிகம்) மனோஜ் சர்மா, நிர்வாக இயக்குநர் (சிஎஸ்ஆர்) அலி ஷா, ஐஐடி பேராசிரியர் கிருஷ்ணகுமார், மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் பேபி ஜார்ஜ், டீன் அஷ்வின் மகாலிங்கம், டீன் மகேஷ் பஞ்சனுல்லா, கார்ப்பரேட் டெவலப்மென்ட் அலுவலகத்தின் தலைமைச் செயல் அதிகாரி கவிராஜ் நாயர் மற்றும் மற்றவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.