கொழும்பு: ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் பணியில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர் மற்றும் எதிர்காலவாதிகளின் கருத்தாய்வு மாநாட்டில் பிரதான மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மனிதாபிமான முதலாளித்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் ஊடாக நமது நாட்டை செழிப்பான நாடாகவும், துரித பொருளாதார அபிவிருத்தியுடைய நாடாகவும் மாற்றி, அதன் பிரதிபலனின் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கும் பொருளாதார கட்டமைப்பிற்கு இந்தக் குழுவோடு செல்ல முடியும்.
இந்த புதிய சிந்தனை சமமான வழிமுறையை பின்பற்றி நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுகின்ற புதிய பாதைக்கு இட்டுச் செல்லும். இதில் ஊழல் மோசடிக்கு எந்த ஒரு இடமும் இல்லை. கொள்முதல் முறைகளையும் மோசடியான அரச கொடுக்கல் வாங்கல் முறைகளையும் தவிர்த்து, ஊழலை அடியோடு இல்லாத செய்யும் பொருளாதார சுதந்திரத்தை வெற்றி கொள்ளும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
எமது நாட்டின் எதிர்கால பொருளாதார வழிமுறைகள் பற்றிய சிநேகபூர்வ கலந்துரையாடல் மற்றும் கருத்தாடல்களில் ஈடுபட்ட எமது நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் வணிகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.