சென்னை: சென்னையில் காலமான இந்திய ராணுவ முன்னாள் தளபதி சுந்தரராஜன் பத்மநாபனின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பணியாற்றியவர் சுந்தரராஜன் பத்மநாபன் (83). இந்திய ராணுவத்தில் 43 ஆண்டுகள் பணியாற்றி 2002 டிசம்பர் 31 அன்று ஓய்வு பெற்றார்.
அதையடுத்து சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு மனைவி ரூபா, ஸ்ரீனிவாஸ் என்ற மகனும், லஷ்மி சத்தியநாராயணன் என்ற மகளும் உள்ளனர்.
இறந்த சுந்தரராஜன் பத்மநாபனின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ கவச வாகனத்தில் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர், அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவ தளபதி சார்பில், சென்னையில் உள்ள தட்சிண பாரத ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங், துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தருண்குமார், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான இந்திய கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் ரவிகுமார் திங்ரா, சென்னை பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் டி. ஜெயசீலன் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.