சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் மருந்து புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) செயலாளர் ஸ்ரீனிவாஸ் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய சமூக நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர்கள் சார்பில் தேசிய மருத்துவ ஆணைய தலைவருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் போதையில்லா இந்தியா திட்டத்தின் கீழ் சில செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, கல்வி வளாகங்களில் போதையில்லா சூழலை உருவாக்கி, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, கல்வி நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மாணவர் விடுதிகளில்.. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நஷா முக்த் பாரத் அபியான் கீழ் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். முக்கியமாக, மாணவர் விடுதிகளில் அந்தக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஆண்டு முழுவதும் செயல்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்ட செயல் திட்டங்களின் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய சமூக நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.