சின்னத்திரையில் ‘ரஜினி’ தொடரின் மூலம் பரிச்சயமாகிய நடிகை சுபிக்ஷா, தற்போது ‘வீரா’ தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வரவேற்பைப் பெற்றுள்ளார். கடந்த 2020ல் கோரியோகிராபர் மானஸூமுடன் திருமணம் செய்துக்கொண்ட சுபிக்ஷா, பிறகு இருவரும் பிரிந்ததாக தகவல்கள் பரவின. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.
சமீபத்திய தகவலின்படி, சுபிக்ஷா அவினாஷ் என்பவருடன் திருமணம் செய்துள்ளார். இந்தத் தகவலை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். கேரள முறைப்படி குருவாயூரில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் இருவீட்டு பெரியவர்களும் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமண வரவேற்பு நிகழ்வு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வீரா’ தொடரில் சுபிக்ஷாவின் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதால், இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கான புதிய பரிசாக அமையக்கூடும்.