சென்னை: கட்சி கொடியல்ல… வெற்றிக் கொடியல்ல… இது கட்சிக்கொடி அல்ல, வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி என விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த பின்னர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
இன்று சந்தோஷமாக உள்ளது. எனது அரசியல் பயணத்தை பிப்ரவரியில் தொடங்கி, கட்சியின் பெயரை அறிவித்தேன். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியது பெருமையாக உள்ளது. நம் எல்லோருக்கும் இது ஒரு சந்தோஷமான நாளாக அமைந்துள்ளது. நம் கட்சிக்கொடிக்கு பின்னணியாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதை பின்னர் தெரிவிக்கிறேன்.
கொடியில் இடம் பெற்றுள்ள படங்களின் விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம். தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாடு வளர்ச்சிக்காகவும் உழைப்போம். சந்தோஷமா, கெத்தா நம் கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.
இது கட்சிக்கொடி அல்ல. வருங்கால தலைமுறையினருக்கான வெற்றிக்கொடி. முறையாக அனுமதி பெற்று, தொண்டர்கள் அவரவர் இல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். அனைவரிடமும் தோழமை பாராட்டி உரிய அனுமதி பெற்று கொடியை ஏற்றி கொண்டாடுங்கள். எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” இவ்வாறு அவர் பேசினார்.