புதுடெல்லி: இந்தியாவில் புதிய மையத்தை சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் திறப்பதற்கான காரணம் என்ன தெரியுங்களா?
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் டெல்லி என்சிஆரில் தனது இந்திய மையத்தை அமைக்க உள்ளது. மத்திய அரசின் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் தனது மையத்தை அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற சிறப்பை சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இதற்கான அனுமதி கடிதத்தை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு இன்று வழங்கினார்.
இதுதொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள எக்ஸ் செய்தியில், இந்த முயற்சி தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கூறப்பட்ட உள்நாட்டில் சர்வதேசமயமாக்கல் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு அடியாகும். இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை நிறுவுதல் என்பது கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, இது ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் துடிப்பான சூழலை உருவாக்குவதாகும் என பதிவிட்டுள்ளார்.