புதுடெல்லி: வதோதராவில் செப்டம்பர் 2 முதல் 4 வரை (திங்கள் முதல் புதன் வரை) மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 23-ம் தேதி பெய்த கனமழை காரணமாக அஜ்வா அணையில் இருந்து விஸ்வாமித்ரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆறு முதல் 8 அடி வரை தண்ணீர் தேங்கியது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் செப்டம்பர் 2-ம் தேதி வதோதராவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருகிலுள்ள பருச் மற்றும் நர்மதா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஹமதாபாத் உட்பட தெற்கு மற்றும் மத்திய குஜராத் எல்லையை ஒட்டியுள்ள சவுராஷ்டிராவில் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி ஆனந்த் மற்றும் பருச் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதப் பருவமழை செப்டம்பர் மாதத்திலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பருவமழை பெய்த சில நாட்களிலேயே குஜராத் அதன் ஆண்டு சராசரியை விட 105 சதவீதம் அதிகமாகப் பெற்றுள்ளது.
சமீபத்தில் பெய்த கனமழையால் குஜராத் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், வதோதராவில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் முதலை ஒன்று காணப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து மாநில அரசு பல்வேறு பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் பிடிபட்ட முதலைகள்: குஜராத் மாநிலம் வதோதராவில் ஆகஸ்ட் 27 முதல் 29 வரை பெய்த கனமழையால் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 28 முதலைகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மேலும், “விஸ்வாமித்ரி ஆற்றில் 440 முதலைகள் வாழ்கின்றன. அஜ்வா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், வெள்ளத்தின் போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன.
முதலைகள் தவிர பாம்பு, நாகப்பாம்பு, முள்ளம்பன்றி, ஆமைகள் உள்ளிட்ட 75 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.”