பாரீஸ்: பாரிசில் நடந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த உத்தரபிரதேச வீராங்கனை ப்ரீத்தி பால், நேற்று (செப்டம்பர் 1) பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் (டி35 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்று மற்றொரு சாதனை படைத்தார்.
முன்னதாக ஆகஸ்ட் 30-ம் தேதி, 23 வயதான ப்ரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் (டி35 பிரிவில்) வெண்கலப் பதக்கம் வென்றார். தற்போது 200 மீட்டர் ஓட்டத்தில் (டி35 பிரிவு) 2-வது வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பால் 200 மீட்டர் ஓட்டத்தை 30.01 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சீன வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 200 மீட்டர் (டி35 பிரிவு) போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
T35 பிரிவு என்றால் என்ன? – ஹைபர்டோனியா, அட்டாக்ஸியா, பெருமூளை வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாராலிம்பிக்ஸ் டி35 வகை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இத்துடன் நடப்பு பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 27-வது இடத்தில் உள்ளது.
சீனா 71 பதக்கங்களுடன் முதலிடத்திலும், கிரேட் பிரிட்டன் 43 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 27 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.