புதுடில்லி: ஐஸ்க்ரீம் டப்பாவில் அதிகளவு பாமாயில் எண்ணெய் இருந்தது, வாடிக்கையாளரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்த வீடியோ செம வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதில், ‘குவாலிட்டி வால்ஸ்’ நிறுவனத்தின் ஐஸ்க்ரீம் டப்பாவை திறக்கும் வாடிக்கையாளர் ஒருவர், கை துடைக்கும் காகிதத்தில் ஊற்றுகிறார். அப்போது, ஐஸ்க்ரீமுடன் சேர்ந்த எண்ணெய் அதிகளவில் வடிகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நண்பர்களே, முந்தைய நாள் இரவு வாங்கிய வெண்ணிலா சுவை உடைய ஐஸ்க்ரீம் இது. பிரிக்கப்படாமல் அப்படியே வைத்திருந்து காலையில் திறந்த போது, அதில் உள்ள ஐஸ்க்ரீம் உருகவில்லை. அதை கீழே ஊற்றிய போது, அதிகளவு பாமாயில் வெளியேறுகிறது.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதில் இருந்தே இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமுக்கு நான் ரசிகன். இந்த ஐஸ்க்ரீமை சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் எந்த பொருளும் சுகாதாரக் கேடு விளைவிப்பதில்லை என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து குவாலிட்டி வால்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிலில், ‘குற்றச்சாட்டு குறித்து நேரடியாக தொடர்பு கொள்ளவும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, இதுவரை 2.18 கோடி பேர் பார்த்துள்ளனர். மூன்று லட்சம் பேர் விரும்பி உள்ளனர். இதற்கு 10,000 பேர் பதிலளித்துள்ள நிலையில், வீடியோ குறித்து கலவையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. ‘குவாலிட்டி வால்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பாலில் இருந்து இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் இல்லை; இது, ‘ப்ரோசன் டெசர்ட்’ எனப்படும் உறைந்த இனிப்பு வகையைச் சார்ந்தது’ என, பெரும்பாலானோர் பதிவிட்டுள்ளனர்.